பாட்டி...

திங்கள், மார்ச் 28, 2011

               
                    பாட்டி- அம்மாவின் அம்மா.
சிலருக்கு ஆச்சி,ஆயா,ஆத்தா, அம்மம்மா. ஆனால் எங்களுக்கு
பாட்டி. அவங்க எட்டு பேருக்கு அம்மா. ஒரு டஜன் பேரக்
குழந்தைகளுக்கு பாட்டி. பொதுவாக எல்லாருக்குமே பாட்டி
என்றால் ரொம்பப் பிடிக்கும்.  அதிலும் எனக்கும் என்
தங்கைக்கும் அப்பாவினுடைய அப்பா, அம்மா இல்லாததால்
அவங்க ஒருத்தர்தான் பாட்டி. அதனால் அவங்க எப்பவும்
எங்களுக்கு ஸ்பெஷல்தான்.

            ஒவ்வொரு வருஷமும் சம்மர் லீவுக்கு நாங்க போறது
பாட்டி வீட்டுக்குத்தான். அதற்காக ஒவ்வொரு வருஷமும்
காத்திருப்போம். நாங்க லீவுக்கு வர்றோம் என தெரிந்ததும்
பலகாரங்கள் நிறைய செய்து வச்சிருப்பாங்க. பாட்டி வீட்டுக்குப்
போனதும், பாட்டி, முதுகையும் , தலையையும்  தடவிக் 
கொடுத்து, அணைத்து வீட்டுக்குள்ள கூட்டிகிட்டு போவாங்க. 
அவங்க பக்கத்துல உட்கார்ந்தாலோ, மடியில படுத்தாலோ 
அவங்க எங்களோட தலையை தடவிக் கொடுக்குற சுகமே
தனிதான்.  பாட்டினாலே ஞாபகத்துக்கு வர்றது, அவங்களோட 
25 பைசா அளவுள்ள குங்குமப் பொட்டும், மூக்கின் இரண்டு 
பக்கமும் உள்ள கல் வைத்த மூக்குத்தியும்தான். அதுவே 
அவங்களுக்கு அழகு. ஏதாவது கல்யாணத்துக்கு பாட்டி 
கிளம்பும்போது, பட்டுப்புடவை கட்டி கொண்டையை சுற்றி பூ 
வைத்து கிளம்பும் அழகே தனிதான். அதேபோல அவங்க 
பொறுமையா செருப்பு போடுவதைக் கூட பார்த்துக்கொண்டே
இருக்கலாம்.

           ஒருமுறை பாட்டி எங்க வீட்டுக்கு வந்திருந்த போது,
அவங்களுடன் டிவியில் படம்  பார்த்துட்டு இருந்தேன். அப்போ
பாட்டி இந்தப் படம் எங்க வீட்டு டிவிலயும் வரும்னு
சொன்னாங்க. அந்த அளவுக்கு ரொம்ப வெள்ளந்தியானவங்க.
அதிர்ந்து யார்கிட்டயும் பேசமாட்டங்க. நான் வளர்ந்ததும்,
எனக்கு சந்தோஷமான விஷயம், பாட்டி என்னைவிட உயரம்
குறைவு என்பதுதான். நான் அவங்களவிட வளர்ந்திருந்தேன்.
இது எனக்கு ரொம்ப ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது. ஏனெனில்,
மற்ற எல்லாரும் என்னைவிட உயரம் அதிகம் என்பதுதான்.
அவங்களுக்கு பிடிச்சது அல்வாவும், கோவிலுக்குப்
போவதும்தான். இன்னும் பாட்டியைப் பற்றி நிறைய
சொல்லலாம். இவ்வளவு பிடிச்ச பாட்டி, நாலு வருஷத்துக்கு
முன்னாடி இதே நாள்தான் எங்க எல்லாரையும்விட்டு
பிரிந்து போனாங்க. இன்னைக்கு பாட்டி வீடும் இல்லை;
பாட்டியும் இல்லை. ஆனால் நினைவுகள் மட்டும் நீங்காமல்
இருக்கிறது.

விளைநிலங்கள் எங்கே?

வியாழன், மார்ச் 17, 2011

               ஊரில் எனது வீட்டிற்குப் பக்கத்தில் ஒரு கரும்புத்
தோட்டம் இருந்தது. தைப்பொங்கலுக்கு ஒரு வாரம் முன்பு,
பொங்கலுக்காக கரும்பு எல்லாம் அறுத்து விட்டு, வயல்
முழுவதும் தீ வைத்துக் கொளுத்திவிட்டிருந்தார்கள். பின் அந்த
வயலை உழுது விட்டு, வேறு ஏதேனும் பயிர் போடுவார்கள்.
இதுதான் வருடம்தோறும் நான் பார்ப்பது. இந்த வருடமும்
அதேபோல, கரும்பு எல்லாம் அறுத்து முடித்து,வயலை சுத்தம்
செய்திருந்தார்கள். பின்னர் பொங்கல் முடிந்து, பத்து நாட்கள்
கழித்துப் பார்த்தால், அந்த வயல் இருந்த இடம் முழுவதும்
அளந்து, ஆங்காங்கே கற்களை ஊன்றி இருந்தார்கள்.
பற்றாக்குறைக்கு, "ஸ்ரீமான் நகர்- பிளாட்டுகள் விற்பனைக்கு"
என்று போர்டு வேறு மாட்டியிருந்தது .


               எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. ஏனெனில்,
சுற்றியுள்ள அந்த ஏரியா முழுவதிலும், இந்த ஒரு இடம்தான்
வயல்வெளியாக, பசுமையாக, பம்புசெட்டுடன் குளுமையாக
இருந்தது. மற்ற இடங்கள் எல்லாம் பிளாட்டுகளாக மாறிக்
கொண்டு இருந்தன. இப்போது இந்த வயல் இருந்த இடமும்
இன்று பிளாட்டாக மாறி விட்டது. இப்படியாக விளைநிலங்கள்
எல்லாமே இன்று கட்டிடங்களாகவும், பிளாட்டுகளாகவும்
மாறிவருகின்றன.



             இன்று ரியல் எஸ்டேட் தொழில்தான் கொடிகட்டிப்
பறக்கிறது. டிவி சேனல்களில் கூட, எந்த சேனல் வைத்தாலும்,
அதில் இங்கு பிளாட்டுகள் உள்ளன, என்று நடிகர், நடிகைகளை
வைத்து விளம்பரம்தான். விவசாயம் பண்ணவேண்டும் என
நினைத்தால் கூட, இந்த ரியல் எஸ்டேட்காரர்கள், மிரட்டி
நிலத்தை வாங்கிவிடுவதாக விவசாயிகள் கூறுகின்றனர்.
மேலும் இப்போதெல்லாம் விவசாயம் செய்ய ஆள்
கிடைப்பதில்லை. விவசாய நிலங்கள் அழிந்துவருகின்றன
என்று கூறுகிறார்கள். அதற்கு முக்கிய காரணம் இப்படி
பிளாட்டுகளாக மாறுவதும், விவசாயம் செய்ய ஆள்
கிடைக்காததும்தான். களை எடுப்பதற்கு, பூச்சி மருந்து அடிக்க
என வயல் வேலைகளுக்கு எல்லாம் இப்போது ஆட்கள்
வருவது இல்லை. சம்பளம் அதிகமாக கிடைக்கும் என,
கிராமங்களில் உள்ளவர்கள் எல்லாம் நகரங்களுக்கு, வீடு
கட்டுவதற்கும், கடைகளில் வேலை செய்யவும் சென்று
விடுகின்றனர் அல்லது வெளிநாடுகளுக்கு சென்று
விடுகின்றனர். 

               மேலும் கஷ்டப்பட்டு விவசாயம் செய்யப்படும்
பயிர்களும் வியாபாரிகளால் குறைந்த விலைக்கே
வாங்கப்படுகின்றன. இதனால் விவசாயிகளுக்குத்தான்
பெரும் நஷ்டம். பெரும்பாலும் போட்ட காசு அவர்களுக்கு
கிடைப்பதில்லை. இதனாலும் விளைநிலங்கள் இன்று
விற்கப்படுகின்றன. இன்று அரசு இதற்காக பெருமுயற்சி
எடுத்து வந்தாலும், இந்நிலை மாறவில்லை. எனது பாட்டி
ஊரில், முன்பெல்லாம் நூற்றுக்கு மேற்பட்ட குளங்கள்
இருந்தனவாம். இன்று அவை எல்லாம்  கட்டடங்களாக மாறி
வருகின்றன. குளத்தில் கட்டடம் கட்டுவதால், மழைக்
காலங்களில் கட்டடங்களைச் சுற்றி தண்ணீர் தேங்கி நிற்கும். 
வீடுகளில் இருப்பவர்கள் எல்லாம் நீந்தி போகிற மாதிரி
நிலைமை இருக்கும். இப்படி இயற்கைக்கு மாறாக, எல்லாம்
செய்வதால்தான இயற்கைச் சீரழிவுகளும் அதிகமாகிக்
கொண்டே வருகிறது. வேறு என்ன சொல்ல? 


மகளிர் தினம்...

செவ்வாய், மார்ச் 08, 2011

     

      இன்று மகளிர் தினம். “மங்கையராய்ப் பிறப்பதற்கே 
நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா என்ற 
பாரதியாருடைய வாக்கை பொன்னாக்கும் வகையில் 
இன்றைக்கு மகளிர் எல்லாத் துறைகளிலும் முன்னேறி, 
மங்கையர் இனத்துக்கே பெருமை சேர்க்கிறார்கள்.

      ஆனால் எவ்வளவுதான் முன்னேறினாலும் இன்றும் 
பெண்களுக்கு நடக்கும் கொடுமைகள் நடந்து கொண்டுதான் 
இருக்கிறது. இன்னமும், பெண்குழந்தைகளைக் கொல்லும் 
அவலம் இருந்து கொண்டுதான் இருக்கிறது.

             21 ஆம் நூற்றாண்டு, பெண்சுதந்திரம், பெண்களுக்கு 
இடஒதுக்கீடு பற்றி இப்போது நாம் விவாதித்துக் 
கொண்டிருந்தாலும் தங்களுக்கான அடிப்படை உரிமைகள் 
கூட கிடைக்காமல் எத்தனையோ பெண்கள் இருக்கின்றனர்.

   என்னுடன் ஸ்கூலில் படித்த எத்தனையோ மாணவிகள்,
நல்ல மார்க் எடுத்தும், தங்களுக்கு வசதி இருந்தும் அவங்க 
அப்பா சொன்னாங்க, அண்ணன் சொன்னாங்கன்னு அவங்களுக்கு விருப்பப்பட்டதைப் படிக்காமல், தங்கள் குடும்பத்தின் விருப்பத்திற்காக, அவர்களுக்குப் பிடித்ததைப் படித்தார்கள். சிலர் 12ஆம் வகுப்போடு நிறுத்தப்பட்டு, திருமணம் செய்துவைக்கப்பட்டார்கள். இவர்களுக்கெல்லாம் படிக்க வசதி இல்லாமல் இல்லை. ஏழை மாணவர்கள் என்றால் நம்மாலான உதவி செய்து படிக்க வைக்கலாம். இவர்கள் எல்லாம் இருந்தும் படிக்க வைக்கப்படவில்லை. சிலர் நல்ல திறமை இருந்தும் பன்னிரண்டாம் வகுப்பில் ஒழுங்காக படிப்பது இல்லை. பத்தாம் வகுப்பு வரை நன்றாக படித்தவர்கள் பன்னிரண்டாம் வகுப்பில் என் ஒழுங்காக படிப்பதில்லை எனக் கேட்டால், "எப்படியும் எங்க வீட்டுல மேல படிக்க வைக்கப் போறது இல்லை. அதுக்கு எதுக்கு கஷ்டப்பட்டு படிக்கணும்?"னு சொன்ன காரணத்தைக் கேட்டு அதிர்ச்சி அடைந்திருக்கிறேன்.

      என்னுடைய தோழி ஒருத்தி 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் கணிதத்தில் 200 மதிப்பெண்கள் எடுத்து, பள்ளியிலேயே முதலாவதாக வந்தாள். அவளது அப்பா மிலிட்டரியில் இருந்தார். அம்மா ஸ்கூல் டீச்சர். அண்ணன் இன்ஜினியரிங் படித்துக்கொண்டிருந்தான். அவளுக்கும் இன்ஜினியரிங் படிக்க வேண்டுமென்று ஆசை. ஆனால் அவள் பிஎஸ்சி கணிதம் படிக்க வைக்கப்பட்டாள். அவள் அம்மாவிடம் அவளை இன்ஜினியரிங் படிக்க வைக்கலாமே என நான் கேட்டதற்கு, “நாலு வருஷம் அதுக்கு செலவழிக்கிற காசுக்கு அவளுக்கு கல்யாணம் பண்ணிடலாம். கல்யாணப் பத்திரிக்கையில போடுறதுக்கு எங்களுக்குத் தேவை ஒரு டிகிரி. அதுக்குத்தான் படிக்க வைக்கிறோம். அவள நாங்க வேலைக்கெல்லாம் அனுப்பப் போறது இல்லை. அவள நாங்க படிக்க வைக்காம இல்லியே? படிக்க வைக்கிறோமே? என என்னிடம் திருப்பிக் கேட்டார். ஒரு டீச்சருக்கு இதற்குமேல் நான் என்ன சொல்வது என வந்துவிட்டேன்.

      இன்று அவளுக்குத் திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இன்றும் அவள், “நானும் இன்ஜினியரிங் படிச்சிருந்தா, ஏதாவது பெரிய கம்பனியில வேலை பார்த்திருப்பேன். எங்க அப்பாவும் அண்ணனும் சேர்ந்துதான் இப்படிப் பண்ணிட்டாங்கன்னு சொல்லி ஆதங்கப்படுகிறாள். 

     இது ஒரு உதாரணம் தான். இதுபோல எத்தனையோ சம்பவங்கள் இன்றும் நடந்து கொண்டிருக்கின்றன. ஆணாதிக்கத்தாலும், பாலியல் தொல்லைகளாலும் எவ்வளவோ திறமைகள் இருந்தும் பெண்கள் பலர் முன்னேறாமல் இருக்கின்றனர்.

     அதுபோல, கணவன் இல்லாமல், யாருடைய உதவியும் இல்லாமல், குழந்தைகளையும் வளர்த்துக் கொண்டு, தானும் முன்னேற பாடுபடும் பெண்கள் இன்று எத்தனை பேர்?அவர்கள் படும் துன்பங்கள்தான் எத்தனை? எத்தனை? கணவன் வெளிநாட்டில் இருந்தாலோ, அல்லது கணவன் இறந்துவிட்டாலோ ஒரு பெண்ணால் இன்று தனியாக வாழும் சூழல் இல்லை. அவளுக்கு மனத்தைரியம் இருந்தாலும் சமூகம் அவளை வேறு ஒரு பார்வையில்தான் பார்க்கிறது. 

      மகளிர்தினம் வருடம்தோறும் கொண்டாடப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. அதனால் என்ன பலன் கிடைத்திருக்கிறது? இன்று நமது முதல் குடிமகள் ஒரு பெண். அந்த அளவுக்கு பல துறைகளில் முன்னேறினாலும், மறுபுறம் பெண்களுக்கு அவலங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. அவை முற்றிலும் களையப்படும் தினம்தான் உண்மையில் மகளிருக்கான தினம். அந்த தினத்திற்காகத்தான் ஒவ்வொரு பெண்ணும் காத்துக்கொண்டிருக்கிறாள்.
.




Related Posts with Thumbnails